புக்கரெஸ்ட்:
உக்ரைனில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில் அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் கங்கா என மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது.
இந்தச் சூழலில் 219 இந்தியர்களுடன் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக நேற்று மும்பையில் தரையிறங்கியது.
மேலும் 250 இந்தியர்களுடன் 2வது விமானம் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து டெல்லி புறப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இன்று இரண்டாவது விமானம் டெல்லியில் தரையிறங்குகிறது.
உக்ரைன் எல்லைகளுக்கு இந்திய மாணவர்களை அழைத்துச் செல்ல நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை எல்லையில் இருந்து அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்களுடன் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்துரையாடினார்.