திருச்சி: ”உக்ரைனில் இருந்து வெளியேறி ருமேனியா வந்த இந்தியர்களை, டில்லி அழைத்து வர விமானங்கள் தயாராக உள்ளன,” என, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமி வழிபாடு செய்வதற்காக, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி விமானம் மூலம் திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டில் போர் நடப்பதால், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், அங்குள்ள இந்தியர்களை, அருகில் உள்ள ருமேனியா போன்ற நாடுகளுக்கு, சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, டில்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றியுள்ள நாடுகளின் அரசாங்கத்திடம் பேச்சு நடத்தி வருகிறோம். ருமேனியா அரசாங்கம், இந்தியாவுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்கள், அந்நாட்டின் எல்லை பகுதிக்கு வருமாறு அறிவிப்பு செய்துள்ளோம். இந்திய அரசு வெளியிட்டுள்ள பிரத்யேக ஆவணத்தை காண்பித்து, உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம்.
அங்கிருந்து வெளியேறியவர்கள், ருமேனியாவின் எல்லைப்பகுதியில், பாஸ்போர்ட் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பிரத்யேக ஆவணத்தை காட்டி, அந்நாட்டின் உள்ளே வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ருமேனியாவுக்கு வந்தவர்களை, டில்லி அழைத்து வர விமானங்கள் தயாராக உள்ளன. உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்கள் அனைவரும், எவ்வித கட்டணமும் இன்றி, இந்தியாவுக்கு இலவசமாக அழைத்து வரப்படுவர். இந்திய துாதரகத்தில் இருந்து, நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விமான சேவைகள் மீண்டும் துவங்கிய பின், சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினார்
Advertisement