உக்ரைன்
நாட்டுக்குள் சரமாரியாக பாய்ந்து வந்த டாங்குகளை தனி நபராக தடுக்க முயன்ற உக்ரைன் நபர் குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யப் படைகள், உக்ரைனுக்குள் ஊடுறுவி சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. பல பகுதிகளையும் ரஷ்யப் படைகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
30 நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவில் ஒரு உக்ரைன் நாட்டுக்காரர், சாலையில் நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான ரஷ்ய டாங்குகள் படு வேகமாக அணிவகுத்து வந்து கொண்டுள்ளன. கீவ் நகரை நோக்கி இந்த டாங்குகள் வருகின்றன.
சீறிப் பாய்ந்து வரும் டாங்குகளுக்கு எதிரே போய் நின்று கொண்டு எதிரியே உள்ளே வராதே,, திரும்பிப் போ என்று அந்த நபர் தடுக்க பார்க்கிறார். ஆனால் டாங்குகள் பக்கவாட்டில் புகுந்து வேகமாக தாண்டிச் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக எந்த டாங்கும் அந்த நபர் மீது ஏறவில்லை. ஏற்றவும் அவர்கள் முயற்சிக்கவில்லை.
மயிர்க்கூச்செறியும் வகையில் இந்த காட்சி இருக்கிறது. தனது உயிரையும் துச்சமென மதித்து ரஷ்யர்களுக்கு எதிராக சிங்கிளாக போராடிய அந்த உக்ரைன் நாட்டுக்காரர் உலக அளவில் பரபரப்பாகியுள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ரஷ்ய படைகள் நினைத்திருந்தால், அந்த நபரை ஏற்றிக் கொன்று விட்டு போயிருக்கலாம். ஆனால் அவர்களும் அது போல மனிதாபிமானம் இல்லாமல் நடக்கவில்லை. அதேசமயம், இந்த உக்ரைன் நாட்டுக்காரரும் தனது தாய் நாட்டுக்காக தனது உயிரையும் பணயம் வைத்து நடு ரோட்டில் நின்று டாங்குகளை மறிக்க முயன்று தனது நாட்டின் வீரம் எப்படிப்பட்டது என்பதை காட்டி விட்டார்.
இந்த காட்சியைப் பார்த்தால் 1989ம் ஆண்டு சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அந்த சமயத்தில் சீன அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தியானன்மென் சதுக்கத்தில் கூடி போராட்டம் நடத்தினர். உலகையே அதிர வைத்த போராட்டம் அது. மாணவர்கள்தான் பெரும்பாலும் அதில் இடம் பெற்றிருந்தனர். அப்போது போராட்டக்காரர்களை ஒடுக்க டாங்குகளை அனுப்பி வைத்தது சீன ராணுவம்.
சாலையில் டாங்குகள் அணிவகுத்து வந்தபோது ஷாப்பிங் சென்ற ஒரு நபர் தனது கைப்பைகளோடு டாங்குகளை வழி மறித்து நிறுத்தினார். டாங்க் நடுவே போய் நின்று கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் பெரும் வைரலானது. டாங்க் மேன் என்று அந்த நபர் செல்லமாக அழைக்கப்பட்டார். ஆனால் சீனப்படையினர் விடவில்லை. தியானன்மன் சதுக்கத்தில் கூடியிருந்த மாணவர்களை ராணுவம் சுட்டு வீழ்த்தி போராட்டத்தை மிருகத்தனமாக ஒடுக்கியது.
இந்த காட்சியோடு உக்ரைன் நாட்டுக்காரரின் வீரத்தை ஒப்பிட்டு பலரும் சிலாகிக்கின்றனர். நினைத்துப் பார்க்கவே பதறுகிறது. இரு நாடுகளிலும் அருமையான உயிர்கள்தான் இந்தப் போரில் சிக்கி பரிதாபமாக பலியாகப் போகின்றன. விரைவில் போர் நிற்க வேண்டும் என்று அனைவரும் வேண்டி வருகின்றனர். ரஷ்யா இறங்கி வருமா என்பது காலத்தின் கையில் உள்ளது.