ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும், தலைநகர் கீவ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடின்
உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த மூன்று நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய ராணுவத்திற்கு முடிந்தவரை எதிர் தாக்குதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரஷ்ய வீரர்கள் 3,500 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும், அந்நாட்டின் பீரங்கிகள், ஹெலிகாப்டர்களை அழித்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ரஷ்யப் படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொது மக்கள் உட்பட 198 பேர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள படையெடுப்பு, சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
3,500 ரஷ்ய வீரர்கள் பலி – பதிலடி கொடுக்கும் உக்ரைன்!
இந்நிலையில் இன்று, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் தெரிவித்து உள்ளதாவது:
ரஷ்யப் படைகளின் தாக்குதல் திட்டத்தை உக்ரைன் ராணுவம் முறியடித்து விட்டது. தலைநகர் கீவ் இன்னும் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. போரை நிறுத்தும்படி ரஷ்ய அரசுக்கு தொடர்ந்து அழுத்தும் கொடுத்து வரும் ரஷ்யர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது தாய்நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.