ரஷ்யாவைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது.
சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து, உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே,
ரஷ்யா
– உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் அச்சுறுத்தும் வகையில், எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க மாட்டோம் என அறிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அண்மையில், போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக திடீரென்று அறிவித்தார்.
இதை அடுத்து கடந்த மூன்று நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காதது ஏன்? – இந்தியா திடீர் விளக்கம்!
இந்நிலையில், உக்ரைன் நடத்திய பதிலடி தாக்குதலில், ரஷ்யாவைச் சேர்ந்த 3,500 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும்,ரஷ்யாவின் 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 பீரங்கிகள் மற்றும் 536 இலகுரக கவச வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யப் படைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.