India Vs Srilanka 2nd t20 Match Update : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி தர்மசாலா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி தற்போது இலங்கை அணி முதலில் களமிறங்க உள்ளது.
இந்திய அணி :
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணி
பதும் நிசாங்கா, கமில் மிஷாரா, சாரித் அசலங்கா, குணதிலகா, தினேஷ் சன்டிமால், தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லாஹிரு குமாரா, பினுரா
நிதான தொடக்கம்
இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 8.4 ஓவர்களில் இலங்கை அணி 67 ரனகள் எடுத்தபோது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ஜடேஜா வீசிய 9-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த குணத்திலகா 4-வது பந்தில் வெங்கடேஷ் அய்யரின்ம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய அசலங்கா 2 ரன்களிலும், கமிலா மஸ்ரா 1 ரன்னிலும், சண்டிமால் 9 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இலங்கை அணி 14.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் நிஷங்காவுடன், கேப்டன் ஷானகா ஜோடி சேர்ந்தார்.
அதிரடி ஆட்டம்
இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய நிலையில், அதிரடியாக ஆடிய நிஷங்கா அரைசதம் கடந்து 53 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர் வெளியேறியதும் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட கேப்டன் ஷானகா கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக ஆடிய கேப்டன் ஷானகா 19 பந்துகளில் 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 47 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், பும்ரா, புவனேஷ்வர், ஜடேஜா, சாஹல், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 184 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
தொடக்கமே அதிர்ச்சி
தொடர்ந்து 184 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 2 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்னில் சமீரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். தொடர்ந்து சிறிது நேரம் தாக்குபிடித்த இஷான் கிஷான் 16 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 5.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் சாம்சன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் அதிரடியாக விளையாடிய சாம்சன் 25 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் கடந்து அசத்தினார். முதல்போட்டியிலும் இவர் அரைசதம் அடித்திருந்தார்.
தொடரை கைப்பற்றியது இந்தியா
இந்நிலையில், 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தினார். இதனால் இந்திய அணி வெற்றி நோக்கிய பயணித்த நிலையில், 17.1 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஜடேஜா 18 பந்துகளில், 7 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 44 பந்துகளில் 6 பவுண்டரி4 சிக்சருடன் 74 ரன்ளும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3—வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
“ “