TNPSC group 2 exam pattern details for aspirants: தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், குரூப் 2 தேர்வின் தேர்வுமுறை குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
குரூப் 2 பதவிகள்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், அரசின் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட 5413 பதவிகள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி
குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இருப்பினும், கூட்டுறவுத்துறை சார்ந்த சில பதவிகளுக்கு டிப்ளமோ படித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை
குரூப் 2 பதவிகளுக்கான தேர்வு முறையைப் பொறுத்தவரை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளை கொண்டது. குரூப் 2ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மட்டும் நடைபெறும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், இரண்டாம் பிரிவில் பொது அறிவு பகுதியில் (பட்டப்படிப்புத் தரம்) 75 வினாக்களும் கணிதப் பகுதியில் (பத்தாம் வகுப்புத் தரம்) 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணிநேரம். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த தேர்வுக்கான குறைந்தப்பட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 90.
முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்
முதல் பிரிவு
பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் மொழிப்பாடம். இந்த பிரிவு பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும். தேர்வர்கள் தங்களுக்கான மொழிப் பாடத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை தேர்வு விண்ணப்பிக்கும்போது செய்ய வேண்டும்.
இரண்டாம் பிரிவு
பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 21.05.2022
இதையும் படியுங்கள்: TNPSC Group 2, 2A: குரூப்-2 தேர்வு புதிய சிலபஸ் இதுதான்… டவுன்லோட் செய்வது எப்படி?
தேர்வு நேரம்: காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதன்மை தேர்வு
முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும்.
தமிழ் மொழித் தகுதித் தேர்வு
முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இதற்கான கால அளவு 3 மணிநேரம்.
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான தலைப்புகள் (விரிவான எழுத்துத் தேர்வு)
- தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
- ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
- சுருக்கி வரைதல் (Precis Writing)
- பொருள் உணர்திறன் (Comprehension)
- திருக்குறள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
- கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
- தமிழ் மொழியறிவு
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம்
- தற்கால நிகழ்வுகள்
- சமுதாயப் பிரச்சனைகள்
- சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
- இந்திய பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
- அறிவியலும் தொழில்நுட்பமும்
- கலையும் பண்பாடும்
- பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்
- இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்
- தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள், விவசாயிகள்), சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இடஒதுக்கீடும் அதன் பயன்களும், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு
- சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக
- திருக்குறள் தொடர்பாக கீழ்காணும் தலைப்புகளில் கட்டுரை எழுதுதல்
(மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம், அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை, மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம், திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை, சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு, திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்)
இரண்டாம் தாள்
பொது அறிவு பகுதியிலிருந்து விரிவான விடையளித்தல் தேர்வாக அமையும். இந்த தேர்வு 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும். இதற்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 102.
பாடத்திட்டம்
- இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் மேம்பாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கங்கள்
- தமிழ்நாட்டின் சிறப்பு குறிப்புகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிர்வாகம்
- இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார நிலை
- தேசிய நடப்பு நிகழ்வுகள்
- மாநில நடப்பு நிகழ்வுகள்
குரூப் 2 தேர்வுக்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ள https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G2_Revised_Scheme_Syllabus.pdf இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 40. நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வின் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை கிடைக்கும்.
குரூப் 2 தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/2022_03_CCSE_II_Notfn_Eng_Final.pdf என்ற இணையதளப்பக்கத்தினை பார்வையிடவும்.