உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்த, உடனடியாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கூறி, உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
சோவியத் யூனியன் அமைப்பில் இருந்து, உக்ரைன் தனி நாடாக பிரிந்ததில் இருந்தே,
ரஷ்யா
– உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, உக்ரைன் விருப்பம் தெரிவித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, உக்ரைன் அச்சுறுத்தும் வகையில், எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்தது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க மாட்டோம் என அறிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அண்மையில், போர் தொடுக்க முடிவு செய்துள்ளதாக திடீரென்று அறிவித்தார்.
இதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. உக்ரைன் ராணுவத்தினரும் பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – உக்ரைன் போட்ட கண்டிஷன்!
ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 198 பேர் பலியாகி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில், 3,500-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 12-க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்த, உடனடியாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கூறி, உக்ரைன் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், ரஷ்யாவை உடனடியாக ராணுவ நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இனப் படுகொலை என்ற கருத்தை கையாள்வதற்காக ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மனு சர்வதேச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.