பியாங்யாங்: ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் நாடு பற்றி எரிகிறது. ரஷ்ய தாக்குதல் 4வது நாளாக தொடரும் சூழலில் அங்கு இத்தகைய பேரிழப்பு ஏற்பட அடிப்படைக் காரணமே அமெரிக்கா தான் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி ஜி சாங்கின் இணையதளத்தில் அமெரிக்காவை குற்றஞ்சாட்டி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:
ரஷ்யா தனது பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்தது. உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியாயமானதே. ரஷ்யாவின் பாதுகாப்புக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் செவி சாய்க்கவில்லை. அமெரிக்கா நேட்டோ வாயிலாக மறைமுகமாக தனது ராணுவ பராக்கிரமத்தை நிறுவ முயன்றது. அமெரிக்காவின் இந்த ஆணவப் போக்கும், தேவையற்ற மத்தியஸ்தமும் தான் உக்ரைன் பிரச்சினைக்கு வித்திட்டது. அமெரிக்கா இரட்டைக் கொள்கையுடன் செயல்பட்டு உக்ரைன் போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு அமைதி, ஸ்திரத்தன்மை என்ற போர்வையில் அவற்றை தவறாக வழிநடத்துகிறது. ஆனால், இன்று தாக்குதல் என்ற நிலை வந்தவுடன் அந்த உக்ரைனுக்கு ராணுவ உதவி ஏதும் வழங்காமல் கைவிட்டுவிட்டது. உலகளவில் அமெரிக்க ஆதிக்க காலம் கடந்துவிட்டது. உக்ரைன் மீது தாக்குதல் நடைபெற அமெரிக்கா தான் காரணம். இதிலிருந்து சிறிய நாடுகள் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். உங்களிடம் பலம் இல்லாவிட்டால் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் என்பதே அது. அதுதான் இந்தத் தாக்குதலின் முக்கியக் கருத்தும் கூட.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரஷ்ய தாக்குதலுக்கு சீனா, பாகிஸ்தான் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது வட கொரியாவும் இணைந்துள்ளது.
வட கொரியா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியா ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.