புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் 98-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவை சக்திவாய்ந்த நாடாகவும் அறிவாற்றல் மிக்கதாகவும் விழுமியங்கள் கொண்டதாகவும் மாற்ற விரும்புகிறோம். வேறு எந்த நாட்டையும் தாக்கி, ஓர் அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்காத உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
அறிவு மற்றும் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா ஒரு காலத்தில் உலகத் தலைவராக இருந்ததை உலகமே நம்புகிறது. ஆனால் முற்போக்குவாதிகள் என்று அழைக்கப்படுவோர் நாட்டின் கலாச்சார சிறப்பு குறித்து அவதூறுபேசி, கேள்வி எழுப்புகின்றனர்.
அறிவியல் துறையில் இந்தியா முன்னணி நாடாக விளங்கியது. ஆனால் பல நூற்றாண்டு கால அடிமைத்தனத்தின் காரணமாக இது, பலருக்குத் தெரியவில்லை. பூஜ்ஜியம் என்ற கருத்துரு இந்தியாவால் வழங்கப்பட்டது. இருபடிச் சமன்பாட்டை ஸ்ரீதராச்சாரியார் வழங்கினார். பித்தாகரஸ் தேற்றத்தை பித்தாகரஸ் கூறுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே போதயானா கூறினார்.
இயேசு பிறப்பதற்கு முன்பே நம் நாட்டில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. பூமியின் வடிவத்தையும் அது தனது அச்சில் சுழல்வதையும் கோபர்நிகஸ் கூறுவதற்கு முன்பே ஆர்யபட்டா விளக்கினார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.