ஆப்பரேசன் கங்கா என்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், மேலும் பல விமானங்களை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது…
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் படையெடுத்த நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக இருதரப்பும் சண்டையிட்டு வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனுக்கு சென்ற மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இந்நிலையில், முதற்கட்டமாக ருமேனியாவில் இருந்து புறப்பட்ட விமானம், 219 இந்தியர்களுடன் நேற்று மும்பை விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து, 250 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் ருமேனியாவின் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து டெல்லி வந்டைந்தது.
அதில் வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் சென்னை வந்தடைந்ததை அடுத்து, பெற்றோர், உற்றார் உறவினர்கள், திரண்டு வந்து அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக மாணவர்களுக்கு வரவேற்பளித்தார்.
ஹங்கேரியில் இருந்து 12 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 240 பேருடன் மேலும் ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது.
உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களில் அண்டை நாடுகள் வழியாக இதுவரை 700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும், 198 பேருடன் 4ஆவது சிறப்பு மீட்பு விமானம் ருமேனியாவில் இருந்து இந்தியா திரும்பியது.
அதேபோல், மேலும் 7 விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் அரசின் செலவில் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
வரும் நாட்களில் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட இடங்களில் பதுங்கு குழிகளில் உள்ளவர்களுக்கு தண்ணீர், உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், போலாந்து எல்லைக்கு உக்ரைனில் இருந்து கடுங்குளிரில் இந்தியர்கள் நடைபயணமாக செல்வதாகவும் அவர் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதனிடையே, மோதல் நிகழும் பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்றும் அருகில் உள்ள ரயில் சேவையை பயன்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.