உக்ரைன் விவகாரம் தொடர்பாக, உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் பதிலடியில், 3,500 ரஷ்ய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் நிலைமை மோசம் அடைந்து வருவதால், அங்குள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு, “ஆப்பரேஷன் கங்கா” என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்தியர்களுக்காக பிரத்யேக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து மும்பைக்கு ஒரு விமானம் மூலமும், டெல்லிக்கு இரு விமானங்கள் மூலமும் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று ஒரு விமானம் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதுவரை 709 பேர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இதற்கிடையே உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா, ருமேனியா ஆகிய நாடுகளின் உதவியுடன், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லியில், உக்ரைன் விவகாரம் மற்றும் ஆப்பரேஷன் கங்கா குறித்து, உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியர்களை பத்திரமாக மீட்பது, விமானங்களை அதிகளவில் இயக்குவது, உக்ரைன் நிலைமையை கண்டறிந்து விமானங்களை இயக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.