பஸ்தி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 6 மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில் பஸ்தியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்தப் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆப்பரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள நமது மகள்களும், மகன்களும் முழுமையாக மீட்கப்படுவார்கள். இதற்காக அரசாங்கம் இரவு, பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நமது குடிமக்களுக்குப் பிரச்சினை என்றால் நமது குடிமக்களை மீட்க ஒரு சிறு வாய்ப்பையும் கூட நாம் விட்டுவைத்ததில்லை.
இவ்வாறு மீட்புப் பணிகள் பற்றி பிரதமர் மோடி கூறினார்.
உ.பி. தேர்தல் தொடர்பாகப் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தின் குடும்ப அரசியல்வாதிகள் (சமாஜ்வாதி கட்சி) அவர்களின் பெட்டகத்தை நிரப்பினர். அவர்கள் தேசம் வளர்ச்சி காண ஏதும் செய்யவில்லை. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2014 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்த குடும்ப அரசியல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டினர். இவர்களுக்கு எல்லாவற்றிலும் கமிஷன் வேண்டும். நாட்டை தற்சார்பு இந்தியாவாக மாற்ற அவர்கள் ஏதும் செய்ததில்லை. இதுதான் குடும்ப பக்திக்கும் தேசபக்திக்கும் இடையே உள்ள வேறுபாடு என்று கூறினார்.