புதுடெல்லி,
இந்தியாவை பொறுத்தவரை, உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியதுமே, உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
அதேநேரம் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இவ்வாறு சென்ற விமானங்களில் ‘முதல் விமானம்’ நேற்று பிற்பகல் 1.55 மணியளவில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 உக்ரைன்வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது. தொடர்ந்து ‘இரண்டாவது விமானம்’ நேற்றிரவு வந்தடைந்தது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட ‘மூன்றாவது விமானம்’ இன்று காலை 10 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.
இன்று மாலை 6.30 மணியளவில், உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்கச் சென்ற சிறப்பு விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில் உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
மேலும், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேஷன் கங்கா குறித்து உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.