ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களில் 300 மாணவர்களுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்துள்ளார். எஞ்சிய மாணவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கச் செலவு குறைவு என்பதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர்.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகள் மற்றும் விடுதிகளின் அடித்தளப் பகுதிகளில் இந்திய மாணவர்கள் பதுங்கி இருக்கின்றனர். விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருப்பதால் அருகில் உள்ள ஹங்கேரி மற்றும் ருமேனியா எல்லைகளில் இருந்துதான் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மீட்க முடியும்.
ஆனால், மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லவேண்டாம் என்று இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் மொபைல் சிக்னல் கிடைக்காததால் மாணவர்களால் தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறது. கீவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் ருஷில் என்ற மாணவர் இது குறித்து கூறுகையில், “இரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே எங்களை விடுதி இருக்கும் கட்டடத்தின் கீழ் தளத்திற்குள் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். உடனே நாங்கள் எங்களது ஆவணங்கள், உடைகள் மற்றும் சிறிது உணவு எடுத்துக்கொண்டு கீழ் தளத்திற்கு ஓடினோம். 3 மணி நேரம் கழித்து மீண்டும் மேலே வந்து உடமைகளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்தோம். ஆனால், எல்லை மூடப்பட்டுவிட்டதால் மீண்டும் திரும்ப வரும்படி கேட்டுக்கொண்டனர்” என்றார்.
மத்திய அரசு அங்கிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மீட்புப் பணிகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என்கின்றனர் உக்ரைனிலிருக்கும் மாணவர்கள்.