காரைக்கால்: உக்ரைனில் படித்து வரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று (பிப்.27) நேரில் சந்தித்து பேசினார்.
காரைக்கால் பி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த வி.கார்த்தி விக்னேஷ், அ.சிவசங்கரி, கோட்டுச்சேரியைச் சேர்ந்த அ.பிரவினா, கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த அ.சந்துரு ஆகிய 4 பேர் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் படித்து வரும் காரைக்காலைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
மாணவர்களை அழைத்துவர புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் மத்திய அரசு மூலமாக மேற்கொண்டுள்ள முயற்சிகளை மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறினார். மாணவர்கள் இந்தியா திரும்பும்வரை தைரியமாக இருக்குமாறு பெற்றோரைக் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, உக்ரைனில் உள்ள காரைக்காலைச் சேர்ந்த மாணவி சிவசங்கரி என்பவருடன் வாட்ஸப் மூலம் தொடர்பு கொண்டு பேசி, இந்திய அரசு உங்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, எனவே தைரியமாக இருக்குமாறு கூறினார்.