கீவ்: ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு உலக நாடுகளும், தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில், எலான் மஸ்க் மற்றும் ஜப்பானிய பணக்காரர் ஒருவரின் உறுதுணை கவனத்துக்குரியதாக இருந்தது.
போர் தொடங்கியது முதல் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து வந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை அனுப்புவதாகக் கூறியுள்ளார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் ராணுவ உதவி அளிக்க முன்வந்துள்ளன. போலந்து நாடு உக்ரைனில் இருந்து வந்துள்ள 1 லட்சம் பேருக்கு தஞ்சம் அளித்துள்ளது. ஹங்கேரி, ருமேனியா நாடுகள் இதுவரை 50,000 உக்ரேனியர்களுக்கு தஞ்சம் கொடுத்துள்ளது.
ஜெர்மனியின் ஆயுத உதவி: உக்ரைனுக்கு உதவ வேண்டியது தங்களது கடமை எனக் குறிப்பிட்டுள்ள ஜெர்மனி பிரதமர் ஒலஃப் ஸ்கால்ஸ், தங்கள் நாடு நீண்ட காலமாக கொண்டிருந்த கொள்கையிலிருந்து விலகி, உக்ரைனுக்கு 1000 டாங்க் எதிர்ப்பு ஆயுதங்கள், 500 ஸ்டிங்கர் வகையறா சர்ஃபேஸ் டூ ஏர் ஏவுகணைகளை அனுப்புவதாக ஒப்புதல் அளித்துள்ளது.
எலான் மஸ்க் உதவி: ரஷ்ய தாக்குதல் வான்வழி, தரைவழி மட்டுமல்லாமல் சைபர் தாக்குதலாகவும் நீண்டது. இதனால் உக்ரைனில் இணைய சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் துணை பிரதமர் எலான் மஸ்கிடம் உதவி கோரினார்.
அது தொடர்பான ட்வீட்டில், “நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற நினைக்கிறீர்கள். ஆனால் ரஷ்யா எங்கள் நாட்டை கைப்பற்ற நினைக்கின்றனர். நீங்கள் விண்வெளிக்கு ஏவுகணைகளை அனுப்பும் போது , ரஷ்யாவோ எங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. தங்கள் நிறுவனத்தின் சாட்டிலைட் மூலம் எங்களுக்கு இணைய சேவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்ற எலான் மஸ்க் வெறும் 10 மணி நேரத்தில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கியுள்ளார். இதையடுத்து, உடனடியாக உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்கை நெட்டிசன்கள் கொண்டாடினர்.
ஜப்பானிய பணக்காரர் உதவி: ஜப்பானைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக தொழிலதிபரான மிக்கிடானி, உக்ரைனுக்கு 8.7 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். “உக்ரைன் மக்களுக்காக வேதனைப்படுகிறேன். ஒரு ஜனநாயக நாட்டின் மீது அத்துமீறி படைபலத்தைப் பயன்படுத்தி அமைதியைக் குலைப்பது சரியல்ல. ரஷ்யாவும், உக்ரைனும் இப்பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
4-ஆம் நாளில் உக்ரைன், தன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு இயன்றவரையில் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், உக்ரைனில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.