உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய மந்திரி ஜெய்சங்கர் கோரிக்கை..!

புதுடெல்லி, 
ரஷ்யா – உக்ரைன் இடையே 4வது நாளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். 

அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து நேற்று வந்த 2 விமானங்களில் மொத்தம் 469 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். மேலும், உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்டுக்கொண்டு 4-ஆவது ஏர் இந்தியா விமானம் தற்போது டெல்லி வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ கோரி மால்டோவா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஹங்கேரிய வெளியுறவு அமைச்சர் பீட்டர் சிஜ்ஜார்டோவை அழைத்தேன். இதுவரை வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன். ஹங்கேரி-உக்ரைன் எல்லையில் மேலும் ஒத்துழைப்பைக் கோரியுள்ளேன். 
உக்ரைன்-மால்டோவா எல்லையில் எங்கள் நாட்டவர்கள் நுழைவதற்கு வசதியாக மால்டோவாவின் ஆதரவு கோரினேன். இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் நிக்கோபெஸ்குவை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அதற்கு அவர் தயாராக இருப்பதாகவும் தங்கள் ஆதரவு உண்டு என்றும் பதில் அளித்தார். அதன்படி வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதிகள் நாளை அங்கு சென்றடைவார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.