ரஷ்யா உக்ரைன் மீது நான்காவது நாளாக இன்றும் போர் தொடுத்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அமெரிக்காவே மூலக்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24ம் திகதி முதல் போர்தொடுத்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் இந்த பதற்றமான போர் சூழலுக்கு அமெரிக்காவே முழுமுதற்காரணம் என வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, வடகொரிய வெளியுறவு அமைச்சகத்திற்கான இணையதள பதிவில், சர்வதேச அரசியல் ஆய்வுக்கான வடக்கு கூட்டமைப்பின் ஆராய்ச்சியாளர் ரி ஜி சாங் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கட்டுரையில் உக்ரைன் நெருக்கடிக்கு அமெரிக்காவின் உயர்நிலை மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கா பாதுகாப்பு விவகாரங்களில் இரட்டைத் தரத்தை கடைபிடித்து வருவதும் தான் மூலக்காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்ற பெயரில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. ஆனால் மற்ற நாடுகள் அவர்களின் சொந்த பாதுகாப்பைஉறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தற்காப்பு நடவடிக்கைகளை எந்த காரணமும் இல்லாமல் தடைபோடும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டியுள்ளது.
ஏற்கெனவே சீனா மற்றும் ரஷ்யாவுடன் மிகநெருக்கமாக நட்புபாராட்டி வரும் வடகொரியா இந்த கட்டுரை மூலம் மறைமுகமான ஆதரவை ரஷ்யாவிற்கு வட கொரியா தந்துஇருப்பதாக தெரிகிறது.
அதே வேளையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியா, ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச பொருளாதார தடை விதிக்கும் நாடுகளின் வரிசையில் சேரப்போவதாக கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.