உக்ரைனில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் செயற்கைக் கோள் மூலம் இணையசேவை வழங்கப்படும் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் துணை பிரதமரும், அமைச்சருமான மைக்கைலோ பெடோரோவ், ரஷ்யாவின் தாக்குதலை குறிப்பிட்டு, உக்ரைன் மக்களுக்கு இணைய சேவை வழங்குமாறு எலன் மஸ்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கை விடுத்த 10 மணி நேரத்திலேயே உடனடியாக நடவடிக்கை எடுத்த எலன் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் மூலம் ஏவப்பட்ட ஸ்டார்லிங் செயற்கைக் கோள் மூலம் உக்ரைனில் இணைய சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது என அறிவித்திருக்கிறார்.