நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த கோவை திமுக செயற்குழுக் கூட்டம் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தீவிரமாகப் பணியாற்றிவந்தவர் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அதிருப்தியில் விலகியிருந்தவர், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், அவரைப் பேச அழைத்தபோது ‘எனக்குக் கூடுதலாக நேரம் வேண்டும்’ என செந்தில் பாலாஜியிடம் அனுமதி பெற்றுப் பேசத் தொடங்கிய மீனா ஜெயக்குமார் “அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை பொறுப்பாளராக நியமித்தவுடன், ‘தலைவர் கோவைக்கு ஒரு நல்ல ஆம்பளையை அனுப்பிவைத்துள்ளார்’ என்று என் நண்பர்களிடம் கூறினேன்.
மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக்கும் பெரிதாகப் பிரச்னை இல்லை. ஓர் இடத்தகராறில் தொடங்கியது. மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியைத் தடுத்தார். சமூக வலைதளம், ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பினார்கள்.
எல்லோரும் மனிதர்கள்தான். உங்கள் மனைவிக்காக என் வாய்ப்பை மறுப்பதா… என் வளர்ச்சியைத் தடுக்க நீங்க யார்?” என்று சாதாரணமாக ஆரம்பித்தவர், தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். முக்கியமாக, மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
மீனா ஜெயக்குமாரின் பேச்சால் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் அப்செட் ஆனார். ஒருகட்டத்தில் அவர் ஒருமையில் பேச கார்த்திக்கின் ஆதரவாளர்கள் மீனா ஜெயக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு செந்தில் பாலாஜி கடுப்பானார்.
‘கூட்டத்தில் இதையெல்லாம் பேச வேண்டாம். உங்கள் பிரச்னைகளை என்னிடம் மனுவாகக் கொடுங்கள்.’ என்று செந்தில் பாலாஜி கூறினார். ஆனாலும், மீனா ஜெயக்குமார் தொடர்ந்து பேச முயன்றார். அவரை திமுக மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமரவைத்தனர். இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.