நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, அம்மாநிலத்தில் நான்கு கட்டங்களாக
வாக்குப்பதிவு
நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், 5ஆவது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
மொத்தம் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 61 சட்டமன்றத் தொகுதிகளில் 692 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, அமைச்சர் சித்தார்த் நாத் சிங்,
காங்கிரஸ்
சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆதாரனா மிஸ்ரா உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் களம் காண்கின்றனர். மொத்தம் 2.24 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.