லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி 34.83 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் கோண்டா உள்ளிட்ட 61 தொகுதிகளிலும் மொத்தம் 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.