மும்பை,
பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது நபர். தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நம்பர் ஒன்றில் அழைப்பு வந்தது. இதனை எடுத்து பேசிய போது எதிர்முனையில் பெண் ஒருவர் குயிக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்து மகி சர்மா பேசுவதாகவும், தங்களிடம் உயர்தர வகுப்பை சேர்ந்த பெண்கள் தங்களிடம் இருப்பதாகவும், தங்களிடம் உறுப்பினராக சேர்ந்தால் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
நட்சத்திர ஓட்டல்
இதனால் சபலம் அடைந்த நிர்வாக அதிகாரி அப்பெண்ணிடம் இது தொடர்பான விபரங்களை கேட்டு முதல் தவணையில் ரூ.5 ஆயிரத்து 800-ஐ செலுத்தி உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் மகிசர்மா, அஞ்சலி சர்மா என்ற பெயர் கொண்ட செல்போன் நம்பரை கொடுத்தார். இதனை தொடர்ந்து நிர்வாக அதிகாரி செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு அஞ்சலி சர்மாவிடம் பேசினார். இதில் உல்லாசமாக இருக்க மகி சர்மாவிடம் பேசி மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் பதிவு செய்யும்படி தெரிவித்தார். இதற்கு ரூ.29 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
போலீசில் புகார்
பின்னர் வெவ்வேறு கட்டங்களாக ஓட்டல் முன்பதிவு ரத்து, செலவு, போக்குவரத்து என பல்வேறு சாக்கு போக்குகளை கூறி ரூ.40 லட்சம் வரையில் அபேஸ் செய்தனர். ஆனால் அவருக்கு எந்த பெண்ணும் சந்திக்க வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார்வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை தொடர்புடைய நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.