உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தனது மன்கிபாத் உரையில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி ‛மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், ‘பீகாரின் குண்டல்பூர் கோயிலில் திருடப்பட்ட சிலை இத்தாலியில் இருந்து மீட்கப்பட்டது. 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேலூர் ஆஞ்சநேயர் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசியில் திருடப்பட்ட அன்னபூர்ணாதேவி சிலை மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு வரை 13 சிலைகள் மட்டுமே இந்தியா கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்து கொண்டு சிலைகளை மீட்க உதவி செய்கின்றன. நமது தாயாரை எப்படி நம்மால் கைவிட முடியாதோ, அதேபோல் தாய்மொழியையும் கைவிடக்கூடாது. தாய்மொழியில் பெருமையுடன் பேச வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கோஹிமா வரையிலான நூற்றுக்கணக்கான மொழிகளும் ஒன்றிணைந்தவை. உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். இதேபோன்று சிறந்த பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். பழங்கால வேதங்களும், அவற்றின் வெளிப்பாடும் சமஸ்கிருத மொழியில் உள்ளது. அனைவரும் தாய்மொழியில் பேசுவதும், கலாசாரத்தை பின்பற்றுவதும் சிறப்பானதாகும். உலகளவில் பிரிட்டன் இளவரசரம் முதல் ஆயிரகணக்கானோர் ஆயுர்வேதத சிகிச்சையின் மூலம் நல்ல பலன்களை அனுபவித்துள்ளனர். இந்தி பாடல்களை ஹம்மிங் செய்து வீடியோக்களை வெளியிட்ட தான்சானிய சமூக ஊடக நட்சத்திர உடன்பிறப்புகளான கிலி பால் மற்றும் நீமா பால் ஆகியோரை பாராட்டுகிறேன். அவர்களை இந்திய தூதரகம் பாராட்டி உள்ளது’ என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.