நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டவுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2021-22ஆம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, 10 மாதங்களில் இந்தியா 7 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி முதல் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கிய நிலையில், அந்த மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது 58 ஆயிரம் கோடியாக இருந்தது. நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
சென்ற நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டு முடிவில் அது இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டுமின்றி கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை பெட்ரோலிய பொருட்களாக 3 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி நடைபெற்றுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் 15 சதவிகித உற்பத்தி செய்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் 15.6 சதவிகிதமாக அதிகரித்த உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் இதுவரை 14.9 சதவிகிதமாக குறைந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM