புதுடெல்லி: உ.பி. தேர்தலில் இன்னும் 3 கட்டவாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. இவை பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இம்மூன்றிலும் உள்ள 173-ல் 57 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜக.வில் அப்னா தளம் 17 மற்றும் நிஷாத் கட்சி16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியில், பிற்படுத்தப்பட்ட ஆதரவு கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்பிஎஸ்பி), 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஸ்பிஎஸ்பி கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தது. இந்த முறை ராஜ்பர் சமாஜ்வாதி கூட்டணியில் இணைந்துள்ளது.
சமாஜ்வாதியின் மற்றொரு புதிய கூட்டணியாக கிருஷ்ணா பட்டேல் தலைமையிலான அப்னா தளத்தின் கமர்வாத் பிரிவு 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உ.பி.யின் கிழக்கு பகுதியில் கணிசமாக உள்ள குர்மி சமூகத்தின் ஆதரவு பெற்ற தலைவர் சோனுலால் பட்டேல் தொடங்கிய கட்சியாக அப்னா தளம் உள்ளது. அவரது மறைவுக்கு பின் சோனுலாலின் மனைவி கிருஷ்ணா பட்டேல், அப்னா தளம் கமர்வாத் பிரிவு எனவும், இளைய மகளான அனுப்பிரியா பட்டேல் அப்னா தளம் என்றும் பிரிந்தன. இதில், அப்னா தளம் தலைவரும் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சருமான அனுப்பிரியா பட்டேல் கடந்த 8 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் உள்ளார்.
அனுப்பிரியாவின் தாய் கிருஷ்ணா பட்டேல், முதல் முறையாக சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். கிருஷ்ணாவின் மூத்த மகள் பல்லவி பட்டேல், கவுசாம்பி மாவட்டத்தின் சிராத்து தொகுதியில் பாஜக. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
டிம்பிள், ஜெயா பச்சன் பிரச்சாரம்
சிராத்துவில் நிலவும் கடும் போட்டியால் இந்த தேர்தலில் அகிலேஷ் சிங்கின் மனைவி டிம்பிள் யாதவ் நேற்று தனது பிரச்சாரத்தை அங்கு தொடங்கினார். இவருடன் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும் சமாஜ்வாதி மாநிலங்களவை எம்.பி.யுமான நடிகை ஜெயா பச்சனும் பிரச்சாரம் செய்தார். மவுரியாவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று சிராத்துவில் பிரச்சாரம் செய்தார். இங்கு மவுரியாவின் வெற்றி சவாலாக உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்தர் பிரதான் மற்றும் கட்கரி ஆகியோரும் சிராத்தில் ஏற்கனவே பிரச்சாரம் செய்து விட்டனர். சிராத்துவில் ஐந்தாம் கட்டமாக பிப்ரவரி 27-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.