சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன் வர வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரடிக்குப்பம் ஊராட்சியில் நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ‘‘தற்போது கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. தண்ணீர் போதுமான அளவுக்கு இருந்தாலும், கரும்பு வெட்ட கூலியாட்கள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற கூலியாட்களும் அதிகமாக சம்பளம் கேட்பதால் கரும்பு விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், கரும்பு பயிரிட்டால் லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கரும்பு அறுவடை செய்ய வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கூலியாட்கள் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரூ.1,000 வரை சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்ய பல்வேறு இடங்களில் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில், கரும்பு களையெடுத்தல், மண் அணைத்தல் போன்றவை இயந்திரங்கள் மூலம் செய்யலாம். இதன் மூலம் விலங்குகளால் கரும்பு பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. கரும்பு நல்ல வளர்ச்சியும் பெறும். ஒரு ஏக்கருக்கு 70 டன்னுக்கு மேல் மகசூல் கிடைக்கிறது. நவீன இயந்திரங்களை கரும்பு சாகுபடிக்கு பயன்படுத்தினால் ஒரு டன் கரும்புக்கு ரூ.700 வரை கட்டணம் செலுத்தலாம்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி நிலையம் அமைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திகழ்ந்து வருகிறது. இங்கு 5 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய முடியும். ஆனால், தற்போது 1.5 லட்சம் மெட்ரிக் டன் அரவை மட்டுமே இங்கு நடக்கிறது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் அதிகமாக கரும்பு சாகுபடி மேற்கொள்ள முன்வர வேண்டும். நவீன அறுவடை இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை இல்லாமல் இருப்பு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்பாண்டில் சர்க்கரை கட்டுமானம் 9.77 சதவீதமும், சர்க்கரை ஆலை உற்பத்தி அளவு 36,610 குவின்டால் ஆக உள்ளது. கரும்பு சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், கரும்பு சாகுபடியில் விவசாயிகளை ஊக்கவிக்க, கரும்பு அபிவிருந்தி பணிகளுக்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, கரும்பு விவசாயிகள் தங்களுக்கு தேவையான அனைத்து பிரச்சினையும் நிவர்த்தி செய்யவும், கரும்பு இருப்பு தொகை தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, கரும்பு விவசாயிகள் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி கரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கரும்பு விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், 7 விவசாயிகளுக்கு கரும்பு இருப்பு தொகை ரூ.11 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். நிகழ்ச்சியில், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து, வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டை கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப்பங்களிப்பு நிதி ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 200 எல்பிஎம் திறன் கொண்ட புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார்.