கல்வெட்டுகளில், தேவதாசிகள் பற்றி சொல்லப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘கல்வெட்டில் தேவதாசி’ என்கிற நூல், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கும் தேவதாசிகள் பற்றிய செய்திகளை, அவர்களின் வாழ்வைப் பேசுவதால் இந்த நூல் கவனம் பெறுகிறது. தேவதாசி என்கிற விளிப்பெயர் சரியானது தானா என்கிற கேள்வியையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. தேவரடியார்கள், தேவமகளார் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் இவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களோடு விரிவான ஆய்வைச் செய்து அதனை நூலாக்கியிருக்கிறார், முனைவர் எஸ்.சாந்தினிபீ. இவர் உத்தரபிரதேசம் அலிகார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த நூலின் முதல் பதிப்பு, டெல்லியில் சாகித்ய அகாதெமியின் ரவீந்திர பவன் அரங்கில் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களால் மார்ச் 2020 இல் வெளியிடப்பட்டது. இதன் விரிவான இரண்டாம் பாதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கோவிலில் தேவரடியார்கள் செய்து வந்த பணிப்பட்டியல், ஆணுக்குச் சமமாக பெற்ற சன்மானம், பணி விதிகள், குடும்ப வாழ்க்கை, பட்டப்பெயர்கள், அவர்களின் பொருளாதார நிலை, இறைவனுக்குத் தேவரடியார்கள் வழங்கிய கொடைகள், அவர்கள் வகித்த பொறுப்புகள், பணியின் படிநிலை, முடிசூடிய மன்னனையே அசைத்த உட்பூசல், வேலை நிறுத்தப் போராட்டம், மாமன்னன் ராஜராஜன் காலத்தில் இவர்கள் நிலை போன்ற பல்வேறு செய்திகளை இந்நூல் பேசுகிறது. கோவில்களில் சிறப்பான இடத்தில் மதிக்கப்பட்ட நிலையில் இருந்து சிலரின் பசிக்கு இரையாகிய அவல நிலைக்கு தேவதாசிகள் மாறியது வரையிலான அரசியல் காரணங்களை இந்நூல் விரிவாக பட்டியலிடுகிறது.