கீவ்: உக்ரைன் நகரங்களுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை துரிதப்படுத்தி உள்ள நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று ஞாயிறுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்களுக்குக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, கார்கிவ், சுமி, கீவ் நகரங்களில் மிக உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. அதனால் இந்தியர்கள் எங்கும் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில் நிலையங்களை நோக்கி இப்போதைக்கு செல்ல வேண்டாம். அடுத்த உத்தரவு வரும்வரை இருக்குமிடத்திலேயே இருக்கவும். நகரின் பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் இந்தியர்கள் இருக்குமிடத்திலேயே இருக்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை குறிப்பாக மாணவர்களை மீட்பது சவாலாக உள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மால்டோவா மற்றும் ஹங்கரி நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் பேசியுள்ளார். உக்ரைன் நகரங்களில் இருந்து மால்டோவா, ஹங்கேரி எல்லைகள் வழியாக இந்தியர்களை மீட்க உதவி கோரியுள்ளார். மால்டோவா வெளியுறவு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ள நாளை இந்திய வெளியுறவு அமைச்சகப் பிரதிநிதிகள் மால்டோவா விரைகின்றனர்.
ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய அரசு உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது. முன்னதாக ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து 240 இந்தியர்களுடன் 3வது மீட்பு விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. தற்போது 198 இந்தியர்களை அழைத்துவர புக்காரெஸ்டுக்கு 4வது விமானம் சென்றுள்ளது.
ஆபரேஷன் கங்கா மூலம் இதுவரை 469 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் 250 பேர் டெல்லி வந்தடைந்தனர். 219 பேர் மும்பையில் பத்திரமாக தரையிறங்கினர். அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. 4 ஏர் இந்தியா விமானங்களும், 1 இண்டிகோ விமானமும் இந்தப் பணியில் ஈடுபடும் எனத் தெரிகிறது.