மும்பை அந்தேரி ரயில் நிலையத்திற்கு அருகில் விரன் ஷா (38) என்பவரை பட்டப்பகலில் இரண்டு பேர் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் சரமாறியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். தேசிய பங்குச்சந்தையில் விரன் ஷா சாப்ஃட்வேர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். கத்திக்குத்தில் கழுத்து உட்பட நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை உடனே போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்ய வந்தவர்கள் கத்தியால் குத்திவிட்டு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பி சென்றது தெரியவந்தது.
உடனே ஸ்கூட்டர் நம்பர் பிளேட் மூலம் கொலையாளிகளை போலீஸார் அடையாளம் கண்டனர். இதில் அபிஷேக் என்பவர் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி விபுல் பட்டேல் என்பவரை கைது செய்தனர்.
கொலைக்கு திட்டம் தீட்டிய மனைவி
இந்த கொலை முயற்சி வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், “விரன் ஷாவின் மனைவி ஜினால் தன் காதலன் விபுல் பட்டேல் என்பவருடன் சேர்ந்து இந்த கொலை முயற்சி சதிக்கு திட்டம் தீட்டியுள்ளனர். காதலனிடம் தன் கணவனை கொலை செய்யும்படி ஜினால் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து விபுபட்டேல் தன் நண்பன் அபிஷேக்கை துணைக்கு அழைத்துக்கொண்டு இந்த காரியத்தை செய்துள்ளான். சம்பவம் நடந்த அன்று விரன் ஷா தன் மனைவி ஜினாலை அந்தேரி ரயில் நிலையத்தில் காலையில் விட்டுவிட்டு தன் காரை நோக்கி நடந்து சென்ற போது விபு பட்டேலும், அபிஷேக்கும் சேர்ந்து கொலை செய்ய முயன்றனர். ஜினால் தன் காதலனுக்கு போனில் தகவல் கொடுத்துள்ளார். தப்பியோடிய இரண்டு பேரும் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் முயற்சி தோல்வி
விபு பட்டேலிடம் விசாரணை நடத்திய பிறகுதான் இந்த கொலை முயற்சியில் விரன் ஷா மனைவிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜினால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் விபு பட்டேலும், ஜினாலும் கல்லூரியில் ஒன்றாக படித்த போது ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. சமீபத்தில் அவர்களுக்குள் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சேர்ந்து வாழ, ஜினால் கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜினாலிடம் விசாரித்தபோது குஜராத்தில் வைத்து ஒரு முறை கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்” என்றனர்.