குடியிருப்பு பகுதிகளிலும் ஏவுகணை வீச்சு| Dinamalar

கீவ்-உக்ரைனை கைப்பற்றுவதற்காக மூன்றாவது நாளாக நேற்றும் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதிகளிலும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைனின் தலைநகர் கீவ் நகருக்குள் புகுந்து உள்ளதாக, ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால், ‘ரஷ்யாவை விரட்டியடிப்போம்’ என, உக்ரைன் கூறியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தரும் தகவல்கள் குழப்பத்தையே உருவாக்கி வருகின்றன.அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்தது. 198 பேர் பலிஇந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை துவங்குவதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இரு தினங்களாக ரஷ்யா, வான்வழி தாக்குதல்களிலும், ஏவுகணை தாக்குதல்களிலும் ஈடுபட்டது. மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் புகுந்தன.இந்நிலையில், தலைநகர் கீவ் நகரை கைப்பற்றும் வகையில், ரஷ்யப் படைகள் நேற்று உள்ளே புகுந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கீவ் நகரின் பல்வேறு இடங்களில் ரஷ்யப் படைகள் தாக்குதல்களை யும் நடத்தியுள்ளன.கீவ் நகரின் புறநகர் பகுதியில், ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், அந்தக் கட்டடத்தின் சில பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதற்கிடையே, ரஷ்யப் படைகளுக்கு எதிராக கடுமையான எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ரஷ்யப் படைகளை விரட்டியடிப்போம் என்றும், உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.இது தரப்பும் மாறி மாறி தெரிவிக்கும் தகவல்களால், குழப்பங்களே நீடிக்கின்றன. உக்ரைனில் எந்தெந்த இடங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

latest tamil news

ஆனாலும், கீவ் நகரின் புறநகர் பகுதிகளையும், அங்குள்ள மின் நிலையத்தையும் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான சண்டையில் இதுவரை, 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டோர் லியாஸ்கோ தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுஇதற்கிடையே, பதற்றத்தை தணிக்கும் வகையில் பேச்சு நடத்த அழைப்பு விடுத்தும், உக்ரைனிடம் இருந்து பதில் வரவில்லை என ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ‘எங்கள் அரசை கவிழ்த்து, தனக்கு ஆதரவான அரசை அமைக்க புடின் முயற்சிக்கிறார்’ என உக்ரைன் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், கீவ் நகர மக்களை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 10:00 மணியில் இருந்து, காலை 7:00 மணி வரையிலான ஊரடங்கு, மாலை 5:00 மணியில் இருந்து காலை 8:00 வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சாலைகளில் இருப்போர், எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களாக கருதப்படுவர் என, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.