கொச்சி: கேரள மாநிலம் காலடியில் ஸ்ரீ சங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு யூனியன் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பல்கலைக் கழகத்தில் பயிலும் திருநங்கை நாதிரா மெஹ்ரீன் சேர் மன் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் (ஏஐஎஸ்எஃப்) சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். ஏஐஎஸ்எஃப் மாநிலக் குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் திருநங்கை நாதிரா, ஏற்கெனவே 2019-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதுகுறித்து நாதிரா கூறியதாவது: இங்கு எம்.ஏ. (தியேட்டர்) முதலாண்டில் படிக்கிறேன். என்னைத் தேர்தலில் போட்டியிடுமாறு சக மாணவ, மாணவிகள் உற்சாகப்படுத்தினர்.திருநங்கைகள், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்க அவர்களை நம்ப வைப்பதற்கும், அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்தத் தேர்தல் உதவும். என்னை பலரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு நாதிரா கூறினார். தற்போது இவர் மாடலிங்கும் செய்து வருகிறார்.