கீவ்; -ரஷ்யப் படைகளிடம் சரணடையும்படி தன் ராணுவத்துக்கு உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ”நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்; சரணடைய மாட்டோம்,” என அவர், ‘வீடியோ’ வில் செய்தி வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள், தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கீவ் நகரை ரஷ்யப் படைகள் நெருங்கியுள்ளதால், தன் படைகளை சரணடையும்படி, உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாக தகவல் வெளியானது. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தன் மொபைல் போனில் இருந்து ‘செல்பி வீடியோ’ ஒன்றை ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:நான் இங்குதான் இருக்கிறேன். சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்; சரணடைய மாட்டோம். எங்கள் நாடு, எங்கள் நிலம், எங்கள் குழந்தைகளை பாதுகாப்பதில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள், தலைநகர் கீவ் நகரை நெருங்கிஉள்ளதால், அங்கிருந்து வெளியேறும்படி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு, அமெரிக்கா ஆலோசனை கூறியுள்ளதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, ”எங்களுக்கு இப்போதைய தேவை ஆயுதங்கள் தான். பயணம் அல்ல,” என குறிப்பிட்டு உள்ள அவர், நாட்டை விட்டு வெளியேற மறுத்து உள்ளார்.
மேலும், ”நாட்டை பாதுகாக்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம்; அவர்களுக்கு தேவையான ஆயுதங்கள் வழங்கப் படும். போரிடத் தயார் என்றாலும், ஆயுதம் வழங்கத் தயார். ”கீவ் நகரம், உக்ரைன் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது,” என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
Advertisement