வாரணாசி:
பிரதமர் மோடி இன்று தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதுகிறார்கள். தொண்டர்களின் கட்சியான பாஜகவுக்கு அவர்களால் ஒருபோதும் சவால் விட முடியாது என்றும் பிரதமர் கூறினார்.
‘இந்திய அரசியலில் எத்தனை பேர் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு செல்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், காசியில் என் மரணத்திற்காக சிலர் பிரார்த்தனை செய்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வாரணாசியோ, இங்குள்ளவர்களோ என்னை விடமாட்டார்கள் என்பதை நான் உணர்ந்தேன். வாரணாசி மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கும்போதே இறப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்’ என்றார் மோடி.
மேலும், முந்தைய ஆட்சியில் புனித யாத்திரை நகரமான வாரணாசி புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய மோடி, மாநிலத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாக கூறினார்.