சென்னை: தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
முன்னதாக, தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், துங்கதுர்த்தி கிராமத்தில் நேற்று காலை 10.50 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பயிற்சி விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது.
அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அப்போது அங்கு வயலில் இருந்த விவசாயிகள் உடனடியாக நல்கொண்டா போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். நல்கொண்டா எஸ்.பி.ராஜேஸ்வரி மற்றும் வருவாய் துறை,தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் இதுகுறித்து எஸ்.பி. ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் , “நாகார்ஜுன சாகர் அருகே உள்ள தனியார் விமான பயிற்சி மையத்துக்கு சொந்தமான, 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக விமானம் பயிற்சி மையத்திலிருந்து காலை 10.30 மணிக்குபுறப்பட்டுள்ளது. புறப்பட்ட 20 நிமிடங்களில் இந்த விமானம் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் பயணம் செய்த சென்னை அயனாவரத்தை சேர்ந்த மஹிமா கஜராஜ் (29) எனும் பெண் பயிற்சி பைலட் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்” என்றார்.
இதுகுறித்து முதல் கட்டமாக நடத்தப்பட்ட விசாரணை மற்றும் நேரில் பார்த்த சாட்சிகள் கூறியபடி, பயிற்சி விமானம் அங்குள்ள உயர் அழுத்த மின் ஒயரில் (133 கேவி) சிக்கி நொறுங்கி விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.