புதுடெல்லி: குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் அஜய் குமார் அகர்வால். கடந்த 2014ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதில், ‘போஸ்ட் பெய்ட்’ முறையில் செல்போன் சேவையை பயன்படுத்தி வந்தேன். 2013ம் ஆண்டு நவ.8ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரையிலான கட்டணம் ரூ.24,609.51 செலுத்தும்படி கூறினார்கள். எனக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.555 கட்டணம் மட்டுமே வந்தது. ஆனால், திடீரென அதிக கட்டணம் கேட்டது அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது. எனவே, அதிக கட்டணம் வசூலித்ததற்காக எனக்கு நஷ்டஈடாக ரூ.22,000-ம், அதற்கான வட்டியையும் வழங்க உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியிருந்தார். ஆனால், ‘1885ம் ஆண்டு தொலைதொடர்பு சட்டம் ‘7 பி’ பிரிவின் படி தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை,’ என்று உச்ச நீதிமன்றத்தில் அந்த செல்போன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு, ‘1986ம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு நிவாரணம் பெற நுகர்வோர் நீதிமன்றத்தை நுகர்வோர்கள் நேரடியாக அணுகலாம்,’ என்று தீர்ப்பளித்தனர்.