நம்புங்க… இங்கே மேயர் பதவிக்கு போட்டியே இல்லை: முத்து நகரில் முரட்டு பக்தர் குடும்ப கொடி!

த. வளவன்

தமிழகத்தின் அனைத்து  மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கு மல்லுக்கட்டு நடக்கிறது. நெல்லை போல சில மாநகராட்சிகளில் கூவத்தூர் பாணியில் அடைகாக்கும் பணியும் தொடர்கிறது.  ஆனால் முத்து நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் மட்டும்  எந்த அரவமும் இல்லை. மேயர் பதவிக்கு வெற்றிக்  கோட்டை தொட்ட திமுக  கவுன்சிலர்கலில் ஒருவரைத் தவிர யாருமே மேயர் கனவிலும்  இல்லை. அந்த பதவிக்கு எந்த போட்டியும் இல்லாமலேயே  ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது தந்தையின் திமுக விசுவாசத்திற்கு கிடைத்த பரிசாகவும் இதைக் கருதலாம் என்று  நம்பிக்கையுடன் சொல்கின்றனர்  தூத்துக்குடி திமுகவினர். யார் அவர்?

அவரது பெயர் ஜெகன். தூத்துக்குடி மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக  கலைஞரின் முரட்டு பக்தன் என்ற பட்டப்  பெயருடன்  இறுதி மூச்சுவரை திமுக மாவட்ட செயலாளராக இருந்த  பெரியசாமியின் மகன். தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கீதா ஜீவனின்  தம்பி.  இவரே மேயர் ரேஸில் சிங்கிளாக கண்களுக்கு தெரிகிறார்.  இவரை தவிர பெரிய அளவில் வேறு யாரும் மேயர் பதவிக்கு போட்டியிட முன்வராததற்கு இன்னொரு காரணமும் உண்டு.  தூத்துக்குடி எம்.பி.யும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின் கருணை பார்வையும் இவருக்கு தான் என்பதால் தூத்துக்குடியில் பெரியசாமி குடும்பத்தினர்  கொடி  உயரமாக பறக்கிறது.

பெரியசாமி திமுக

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள  60 வார்டுகளில் திமுக 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், சிபிஎம், சிபிஐ, மதிமுக,  இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டிலும் என திமுக கூட்டணி 50 வார்டுகளை கைப்பற்றியது. அதிமுக 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். சுயேச்சை வேட்பாளர்களையும் திமுக தம் பக்கம் இழுக்க திமுக கூட்டணியின் பலம் 54 ஆக உயர்ந்தது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றியிருக்கிறது திமுக.

ஜெகன்

தூத்துக்குடி வடக்கு  மாவட்ட திமுக பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவனே நேரடியாக வெற்றி பெறக்கூடிய தகுதியான வேட்பாளர் தேர்வில் அக்கறை காட்டினார். ஒவ்வொரு வேட்பாளருக்கும் கடந்த காலங்களில் அவர்கள் திமுக தலைமைக்கு கட்டுப்பட்டு  நடந்ததை தலைமைக்கு சுட்டிக் காட்டியே அவர்களுக்கு தலைமை ஒப்புதலுடன் சீட் வாங்கினாராம்.  இந்த நிலையில்  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ஜோயல் மேயர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தினார். ஜோயல் மதிமுகவிலிருந்து திமுகவில் சங்கமம் ஆயிருந்தாலும் மாநில அளவில் உதயநிதியின் ஆதரவாளராக கருதப் படுபவர். ஆனாலும் மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவனுடன் சேர்ந்து தூத்துக்குடி  மாவட்ட எம்பியும் மாநில மகளிரணி செயலாளருமான  கனிமொழியும் இதை எதிர்க்க மாற்றுக் கட்சியில் இருந்து  வந்தவர் என்ற அடிப்படையில் ஜோயலுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டது.

நிர்மல்ராஜ் திமுக

மறைந்த தூத்துக்குடி பெரியசாமி  30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் மாவட்டச் செயலாளராகவும், பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.  கட்சியை  தனது கட்டுப்பாட்டில்  வைத்திருந்தார். ஆனால் ஒரு முறை கூட அமைச்சராகவோ, பிற அரசு பதவிகளுக்கோ முயன்றதில்லை இந்நிலையில் அவரது மகனும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமிக்கு  மேயர் பதவி கொடுத்தால் என்ன  தவறு என கனிமொழியே  திமுக தலைமையிடம் பேசியதாகவும்  திமுக வட்டாரங்களில் ஒரு பேச்சு இருக்கிறது. 

கடந்த  2014 பாராளுமன்ற தேர்தலில்  அதிமுக  வேட்பாளர்  நட்டர்ஜியை எதிர்த்து  திமுக சார்பில் போட்டியிட்டார். ஜெகன். ஆனால் தோல்வியை தழுவினார்.  எனவே அடுத்த  தேர்தலிலாவது  எம்பி ஆகி விட வேண்டும்  என முனைப்பு காட்டினார்  ஜெகன்.  இந்த நேரத்தில் 2019  பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி  திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள  தொகுதி என  உணர்ந்து கொண்ட கனிமொழி  தூத்துக்குடியில் போட்டியிட திமுக தலைமையிடம்  பேசியிருக்கிறார். ஆனால்  இதை பெரியசாமி குடும்பத்தினர் தான் முடிவு செய்ய  முடியும்  என திமுக தலைமை சொல்லி விட்டதாம்.  கனிமொழியை நேரடியாக ஜெகனிடம் பேச ஜெகன் கனிமொழிக்காக தூத்துக்குடியை விட்டுக்  கொடுத்தார். எனவே  சரியான சந்தர்ப்பம் வரும் போது ஜெகனுக்கு  உதவிட காத்திருந்த  கனிமொழி  அதை செய்து முடித்து விட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.   கனிமொழி பெயரை திமுக தலைமை அறிவித்த மறு நிமிடத்திலிருந்து  அவருக்கு அந்த தொகுதி முழுவதும் தேர்தல் பணியாற்றி இருக்கிறார் ஜெகன். அதேபோல் கனிமொழி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும், ஆய்வுப் பணிகளிலும்  தொடர்ந்து பங்கேற்று  அவரது  குட்புக்கில் இடம் பெற்றது  ஜெகனுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.  

ஜெனிதா

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை திமுகவில் மேயர் பதவிக்கு தான் பெரிய அளவில் போட்டி இல்லையே தவிர துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கோ அல்லது சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கோ தூத்துக்குடி துணை மேயர் பதவி வழங்கப்படுவதே  பொதுவான வழக்கம். அந்த வகையில்  பெண்ணாக இருந்தால் தூத்துக்குடி  வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜின் மனைவி ஜெனிட்டா, ஆணாக இருந்தால் நிர்மல்ராஜ் என இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.  மொத்தத்தில் பெரியசாமி குடும்பத்தினர் கைகாட்டும் நபரே மேயராகவும் துணை மேயராகவும் தூத்துக்குடி மாநகராட்சி இருக்கைகளை அலங்கரிக்க முடியும்.  

 “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.