பணகுடி:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ககன்யான் திட்டமாகும். பூமியின் தாள்வட்டப்பாதைக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் செயல் படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் 2023-ம் ஆண்டு செயல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்களுக்கான என்ஜின்களை சோதனை செய்து ஆய்வு நடத்தி அனுப்பும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சி.இ. 20 எனப்படும் கிரையோஜெனிக் என்ஜின் வாயிலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆய்விற்கான பரிசோதனை பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்து 600 வினாடிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சி.இ. 20 எனப்படும் என்ஜின் 50 வினாடிகள், 720 வினாடிகள், 100 வினாடிகள் என ஏற்கனவே 3 கட்டங்களாக நடந்த பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 4-ம் கட்ட பரிசோதனை 100 வினாடிகள் நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ மைய விஞ்ஞானிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனையை காணொலி காட்சி வாயிலாக இஸ்ரோ உயர்மட்ட விஞ்ஞானிகள் பார்வையிட்டனர். அப்போது அவர்கள் மகேந்திரகிரி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்… உக்ரைன் நாட்டிற்கு ரஷிய நடிகை 10 ஆயிரம் டாலர் நிதியுதவி