புதுடில்லி: வேலூர் உட்பட பல நகரங்களில் இருந்து திருடி செல்லப்பட்ட பாரம்பரிய பெருமை மிக்க சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
‛மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்த மாத துவக்கத்தில்,, இத்தாலியில் இருந்து நமது விலை மதிப்பற்ற பாரம்பரியத்தை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அதில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய சிலையும் ஒன்று. இந்த சிலை பீஹாரின் கயா மாவட்டத்தில் உள்ள குண்டல்பூர் கோயிலில் திருடப்பட்டது. அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் ஆஞ்சநேயர் சிலைகள் திருடப்பட்டன. இந்த சிலை 600 முதல் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இந்த மாதத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து நமது தூதரகம் மீட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசியில் திருடப்பட்ட அன்னபூர்ணாதேவி சிலை மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இது இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளதை காட்டுகிறது. கடந்த 2013ம் ஆண்டு வரை 13 சிலைகள் மட்டுமே இந்தியா கொண்டு வரப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு வரப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்து கொண்டு சிலைகளை மீட்க உதவி செய்கின்றன.
நமது வாழ்க்கையின் அடித்தளம், தாயார், தாய் மொழி மூலம் வடிவமைக்கப்படுகிறது. நமது தாயாரை நம்மால் கைவிட முடியாதது போல், தாய்மொழியையும் கைவிடக்கூடாது. நமது தாய்மொழியில் பெருமையுடன் பேச வேண்டும். மொழியில், இந்தியா பலம் கொண்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கோஹிமா வரையிலும் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. ஆயிரகணக்கான பேச்சுவழக்குகள் இருந்தாலும், அவை ஒன்றிணைந்தவை.
பல நூற்றாண்டுகளாக நமது மொழிகள் பரஸ்பரம் கற்றுக்கொண்டும், தங்களைத் தாங்களே செம்மைப்படுத்திக்கொண்டும், ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டும் உருவாகி வருகின்றன. உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் இந்தியாவில் உள்ளது, உலகத்தின் குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை நாம் பெற்றிருப்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். அதே வழியில், பல பழங்கால வேதங்களும் உள்ளன; அவற்றின் வெளிப்பாடும் நமது சமஸ்கிருத மொழியில் உள்ளது. அனைவரும் தாய்மொழியில் பேசுவதும், கலாசாரத்தை பின்பற்றுவதும் சிறப்பானதாகும்.
உலகளவில் ஆயிரகணக்கானோர் ஆயுர்வேதத சிகிச்சையின் பலன்களை அனுபவித்துள்ளனர். அந்த சிகிச்சையின் பெருமைகளை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உணர்ந்துள்ளார். அவரை சந்திக்கும் போது எல்லாம் ஆயுர்வேதம் குறித்து பேசுவார். இந்தியவாவில் உள்ள ஆயுர்வேத மையங்களை அவர் அறிந்து வைத்துள்ளார். பாதுகாப்பு படையில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. கல்வி மற்றும் தொழில் துறைகளில் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Advertisement