உக்ரைனில் போர்ச்சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களுடைய பெற்றோரின் தவிப்பும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. எப்படியாவது தங்களது பிள்ளைகளை மீட்டுத் தந்துவிடுங்கள் என பெற்றோர் ஒருபுறம் கண்ணீர் வடிக்க, எப்படியாவது தங்களை மீட்டு அழைத்துச் செல்லுங்கள் என்ற மாணவர்களின் கதறல் வீடியோக்களும் வெளியான வண்ணம் உள்ளன.
திருச்சி பெரிய மிளகுப்பாறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த மாவட்ட ஆட்சியர் சிவராசுவை அணுகிய ஜெயலட்சுமி என்ற பெண், எதிர்பாராதவிதமாக திடீரென அவரது காலில் விழுந்து கதறத் தொடங்கினார்.
தனது மகன் ராஜேஷ் உக்ரைனில் சிக்கியிருக்கிறான் என்றும் உணவு, உறக்கம் இன்றித் தவிக்கும் மகனை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பாதுகாப்பாக அவர்கள் வீடு திரும்புவர் என்றும் உறுதியளித்தார்.
உக்ரைனில் சுமி என்ற பகுதியில் சிக்கியிருக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி தாங்கள் பதுங்கியிருக்கும் நிலவறைக்குள் மின்சாரம், தண்ணீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அவதியுறுவதாக ஆடியோ அனுப்பியுள்ள நிலையில், மகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர்.
முக்கியமாக 500 பேருக்கு மேல் தங்கியிருக்கும் அந்த நிலவறைக்குள் போதிய கழிவறை இல்லாமல் தவிப்பதாக அந்த மாணவி ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரனின் சாப்போரிசையா என்ற பகுதியில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். தாங்கள் பதுங்கியிருக்கும் நிலவறையிலிருந்து உணவு வாங்குவதற்காக 15 நிமிடங்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கின்றனர் என்றும் ஆனால் உணவும் பணமும் கிடைக்காமல் தவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு வீடியோவில் கார்கீவ் பகுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள், குண்டு சப்தங்களுக்கு இடையே தங்களது நிலையை விவரித்துள்ளனர்.