மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.
உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷியா தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்தது. அதன்பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷிய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த அழைப்பையும் உக்ரைன் ஏற்க மறுத்தது. பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை உக்ரைன் வீணடிப்பதாக ரஷியா குற்றம்சாட்டியது.
இந்நிலையில், ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பெலாரசில் விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.