மத்திய அரசு நடத்திய உடல் ஆரோக்கிய சவால் போட்டியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
75-ம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, உடல் ஆரோக்கியம் சார்ந்த போட்டிகளில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சார்ந்த தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் முதன்மைசெயல் அலுவலர்கள், ஆணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் இணையதளம் வாயிலாக பதிவு செய்த நபர்களின் நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் இணையம் வழியே கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
75 நகரங்கள் பங்கேற்பு
நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகளில் 75 நகரங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் 297 பேரும், பல்வேறு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் அரசு ஆணையாளர்கள் 56 பேரும் பதிவு செய்தனர்.
நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் ஆகிய சவால் போட்டிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிவு செய்திருந்தார். இதில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் 390 கிமீ தூரம் ஓடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நடைபயிற்சி சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி 5-ம் இடத்தை பிடித்துள்ளார்.
சென்னை மாநகரம் முதலிடம்
சென்னை மாநகரில் மிதிவண்டி ஓட்டுதல் சவாலில் 1,059 பேர் பதிவு செய்து மொத்தம் 72 ஆயிரத்து 458 கிமீ தூரத்தை கடந்துள்ளனர். இதன்மூலம் போட்டியில் கலந்து கொண்ட நகரங்களிலேயே அதிகம் பதிவு செய்தவர்கள், கடந்த தூரம் அடிப்படையில் சென்னை மாநகரம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.