கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள், தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் ரஷிய படைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால் உக்ரைன் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆர்வமுள்ள நபர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். பொதுமக்களுக்கும் ஆயுதம் வழங்கப்பட்டு, ரஷிய படைகளை எதிர்ப்பதற்கு தயார்படுத்தி உள்ளனர்.
உக்ரைன் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறார். தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றும் அவர், நாட்டை பாதுகாக்க வீரர்கள் உத்வேகத்துடன் போராடும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மாத ஊதியமாக 1 லட்சம் உக்ரேனிய ஹிருன்யா (இந்திய மதிப்பில் ரூ.2.52 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.