சிவராத்திரியன்று சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா, மார்ச் 1-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.1-ம் தேதி மாலை முதல் 2-ம் தேதிவரை சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும் நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மிகசமய நிகழ்ச்சிகளை நடத்த கோயில்நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படு கிறது.
மகா சிவராத்திரி கொண்டாடப்படும் கோயில்களில் குறிப்பாக கோபுரங்களில் முழுமையாக மின்அலங்காரங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத்தடுப்பு வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார, குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகன நிறுத்தம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, நாட்டிய நாடகம், பரதநாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசைப் பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒருகுறிப்பிட்ட கால அளவு நிர்ணயம்செய்து மகா சிவராத்திரி இரவுமுழுவதும் பக்தர்களும், சேவார்த்திகளும் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் கரோனா தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.