கீவ்,
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தாக்குதல் கடந்த பிப் 24 ஆம் தேதி அதிகாலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போர் 4வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்கள் தலைநகரை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதிகொண்டு அங்கு சண்டை செய்து வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போரில் இரு நாட்டுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தாக்குதல் தீவிரமடையும் சூழலே இருந்து வருகிறது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சூழ்நிலையின் அனைத்து புவிசார் அரசியல் சிக்கல்களையும் நான் புரிந்துகொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அனைத்து ஜனநாயக நாடுகளும் தங்கள் மதிப்புகளுக்காக நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்று இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார்.