மும்பை:
ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில் உக்ரைன் எல்லை வழியே ருமேனிய எல்லைக்கு வரும் மாணவர்கள் உள்பட இந்தியர்களை தலைநகர் புக்கரெஸ்ட்டிற்கு அழைத்துச் செல்லும் தூதரக அதிகாரிகள் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ருமேனியாவில் இருந்து 219 இந்தியர்களுடன் நேற்று பிற்பகல் புறப்பட்ட முதல் விமானம் நேற்று இரவு 7.50 மணியளவில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமானத்திற்குள் சென்ற மத்திய மந்திரி பியூஷ் கோயல் விமானத்தில் இருந்த மாணவர்கள் உள்பட இந்தியர்களை வரவேற்றார்.
அந்த விமானத்தில் வந்த குஜராத்தை சேர்ந்த 44 மாணவர்கள் அம்மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் 2 பேருந்துகள் மூலம் குஜராத் அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவி தாரா வோரா, நம் நாட்டையும், மத்திய அரசையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மீதமுள்ள மாணவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
மற்றொரு மாணவி அகன்ஷா ராவத் கூறுகையில், நான் மிகவும் பயந்தேன், ஆனால் மத்திய அரசுக்கு நன்றி, நாங்கள் பாதுகாப்பாக சென்றோம். நாங்கள் முதலில் மீட்கப்பட்டோம். அரசு ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுத்தது என்று கூறியுள்ளார்.