டெர்னோபில்: உக்ரைன் மீதான் ரஷ்ய தாக்குதல் இன்று இரண்டாவது நாளாக உக்கிரமடைந்துள்ள நிலையில், தெருவெங்கும் சைரன்களை ஒலித்து மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் கல்வி நிமித்தமாக தங்கியுள்ள 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்பதில் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. நேற்றிரவு ரஷ்ய அதிபருடன் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, இந்தியர்களை குறிப்பாக இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் பலரும் அரசாங்கம் மற்றும் தாங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்திய சுட்டிக்காட்டிய இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அந்த வகையில் உக்ரைனில் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள மாணவர் ஒருவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிலேஷ் ஜெயின் என்ற அந்த மாணவர், “நான் டெர்னோபில் எனும் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். பாதுகாப்புக்காக நாங்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளோம். 30 மணி நேரத்துக்கும் மேலாக இங்கே சிக்கியுள்ளோம். இணையம் சரியாகக் கிடைக்கவில்லை. சுற்றிலும் வெடிகுண்டு சத்தம் மட்டுமே. பிரதமர் மோடி எங்களை மீட்க வேண்டும் எனக் கோருகிறோம்” என்றார்.
அந்த வீடியோவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷ் ஜெய்ஸ்வால் என்ற இளைஞர், “நாங்கள் உதவியற்றவர்களாக நிற்கிறோம். காலை முதல் நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகேயே இரண்டு, மூன்று முறை குண்டுவெடிப்பு சத்தம் கேட்டன. வான்வழிப் போக்குவரத்து அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த வேளையில் பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உதவ வேண்டும் எனக் கோருகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதேபோல் குஜராத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், “ஏற்கெனவே முன்பதிவு செய்த விமான டிக்கெட்டுகள் ரத்தாகிவிட்டன. எல்லா விமான நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன” என்றார்.
இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களும் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் நேற்று பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கி, உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள மாணவர்களை அதன் அண்டை நாடான ருமேனியா வழியாக மீட்பதென்று மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தவிர ஹங்கேரி, போலந்து நாடுகளிடமும் மத்திய அரசு பேசி வருகிறது.
உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளான மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.