உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின்தளமான செயல்படும் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடின்
உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது கடந்த நான்கு நாட்களாக, ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால், உக்ரைன் நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும், ரஷ்ய ராணுவத்திற்கு முடிந்தவரை எதிர் தாக்குதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ரஷ்ய வீரர்கள் 3,500 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாகவும், அந்நாட்டின் பீரங்கிகள், ஹெலிகாப்டர்களை அழித்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ரஷ்யப் படைகள் நடத்திய பயங்கர தாக்குதலில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொது மக்கள் உட்பட 198 பேர் பலியாகி உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள படையெடுப்பு, சர்வதேச அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ – ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி!
இந்நிலையில் இன்று, அண்டை நாடான பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரில், உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, ரஷ்யா அறிவித்தது. இதற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின்தளமான செயல்படும் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், வேறொரு நடத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.