ரஷ்ய ஆக்கிரமிப்பில் உக்ரைன்: என்னவாகும் உலகம்!?

போர் என்ற வார்த்தைக்குப் பதிலாகத் தாக்குதல், ஊடுருவல், எல்லையில் பதற்றம் போன்றவற்றையே சமீபகாலமாக அதிகமும் கேள்விப்பட்டு வருகிறோம். ஆங்காங்கே சில அண்டை நாடுகளுக்குள் நடைபெறும் மோதல்களும்கூட அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சில பெரிய நாடுகளின் தலையீட்டினால் அப்படியே அமுங்கிவிடுவதுதான் வழக்கம். தைவான், இந்திய எல்லைகளில் சீனாவில் அத்துமீறல்களும்
உக்ரைன்
உள்ளிட்ட அண்டை நாடுகளின் மீது
ரஷ்யா
தோற்றுவிக்கும் பதற்றங்களும் இதிலிருந்து விதிவிலக்காக இருந்துவருகின்றன. இதர பெரிய நாடுகள் இவ்விஷயங்களில் தலையிடுவதெல்லாம் ரகசியப் பிரமாணங்களுக்கு உட்பட்டு மறைமுகமாகவே இருக்கின்றன.

இந்தச் சூழலில்தான், உக்ரைன் தலைநகரமான கீவ் நகரம் முதல் அதன் இதர பிராந்தியங்களை நோக்கி வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளில் ரஷ்யப் படைகள் முன்னேறுவதும் அதை எதிர்த்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான போர் சாத்தியமா?

எல்லைகளைக் கடப்பதாக அல்லாமல், ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் அங்கிருக்கும் வளங்களையும் சுரண்டுவதாகப் போரின் வரையறைகள் மாறிவிட்ட காலம் இது. உண்மையில் ஒரு போருக்காக உலக நாடுகள் இரண்டாக அணி பிரிந்தால் அதன் பாதிப்பு காலாகாலத்திற்கும் தொடரும் என்ற பயமே இதற்குக் காரணம். அது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகள் பலவும் தங்கள் அண்டை நாடுகளின் வளர்ச்சியிலும் வளங்களிலும் கண் பதிப்பதும் சாதாரணமாக இருந்துவருகிறது. எந்த நாடும் இதில் விதிவிலக்கல்ல என்பதை வைத்துப் பார்க்கும்போது உக்ரைன் தனது கட்டுப்பாட்டிலோ அல்லது நேரடி அதிகாரத்தின் கீழோ இருக்க வேண்டுமென்று ரஷ்யா விரும்புவதன் அர்த்தம் பளிச்சென்று தெரியும்.

யுரேனியம், டைட்டானியம், மாங்கனீஸ், இரும்பு, பாதரசம் போன்றவை உலக அளவிலும், ஐரோப்பிய அளவிலும் உக்ரைனில் அதிக அளவில் கிடைக்கின்றன. இது தவிர நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய வளங்களையும் அந்நாடு அதிகம் கொண்டுள்ளது. மலர்கள், பழங்கள் உட்பட விவசாய உற்பத்தியிலும் தன்னிறைவைத் தாண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லமையுடன் திகழ்கிறது. உக்ரைன் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தவரை ரஷ்யாவுக்கு இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இனிமேல், இந்த வளங்கள் அனைத்தும் மேற்குலகுக்குப் பயன்படப் போகிறது என்பதுதான் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சியைத் துரிதப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், மிகச் சமீபத்தில்
நேட்டோ
அமைப்பில் உக்ரைன் இடம்பெற்றிருப்பது மேற்கண்ட வளங்களின் வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு எளிதில் வழி வகுக்கும்.

நேட்டோவும் உக்ரைனும்!

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனும் நேட்டோவை (
NATO
) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் 1949இல் உருவாக்கின. இதில் 30 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. என்னதான் உறுப்பு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர உதவிகளுக்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காகவே இவ்வமைப்பு பலப்படுத்தப்பட்டது. இன்றுவரை இவ்வெண்ணம் தொடரும் நிலையில், உக்ரைன் சமீபத்தில் நேட்டோவில் உறுப்பினராகியுள்ளது. இதுவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் ஆக்கிரமிப்பில் இறங்க முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ராணுவ ஆதிக்கம், நாஜிமயமாக்கம் ஆகியவற்றிலிருந்து உக்ரைனை விடுவிப்பதற்காகவே இப்போரில் ஈடுபட்டுள்ளதாக புதின் கூறியிருப்பதிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும். ‘நான் யூதன் ஆயிற்றே, எப்படி நாஜி ஆக முடியும்’ என்று உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கி இதற்குப் பதிலளித்தது கண்டிப்பாக புதினைச் சிரிக்க வைத்திருக்காது.

1991இல் சோவியத் ரஷ்யாவின் அதிபராக கார்பச்சேவ் இருந்தபோது உக்ரைன், பெலாரஸ், லாட்வியா, அஜர்பைஜான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தனியாகப் பிரிந்தன. 1991இல் உருவாக்கப்பட்ட வார்சா ஒப்பந்தப்படி தன் அண்டை நாடுகள் நேட்டோவில் உறுப்பினராகக் கூடாது என்று ரஷ்யா கட்டுப்பாடு விதித்தது. ஆனால் எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ரொமானியா, ஸ்லோவேனியா, குரோஷியா, மாண்டிநேக்ரோ, அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, பல்கேரியா என்று ரஷ்யாவின் அண்டை நாடுகள் தொண்ணூறுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக நேட்டோவில் இணைந்தன. இந்த வரிசையில் உக்ரைனும் சேர்வது ரஷ்யாவுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

நேட்டோவில் சேர்வதால் என்ன? இந்நாடுகளில் நேட்டோ படையினரை நிறுத்திக்கொள்ளலாம்; படைத்தளங்களை அமைக்கலாம். நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், அதற்கு ஆதரவாக இதர நாடுகள் களமிறங்கலாம். இன்னும் வல்லரசு அந்தஸ்தை இழக்கவில்லை என்று நம்பும் ரஷ்யாவைக் கோபத்திற்கு ஆளாக்கிய விஷயமும் இதுதான். இலங்கையில் சீனா மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைகள் எப்படிப்பட்டதென்று அறிந்திருப்பதால், நமக்கு இதன் முக்கியத்துவம் தெரியும்.

உக்ரைன் நேட்டோவிலிருந்து விலக வேண்டுமென்று வலியுறுத்தும் ரஷ்யா, ஐரோப்பாவில் தனக்கடுத்து இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் உக்ரைனில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கால் பதிப்பதைத் தனக்கான அச்சுறுத்தலாகக் கருதுகிறது. மொழியிலும் கலாசாரத்திலும் பெருமளவு பொருந்திப்போகும் ரஷ்யாவும் உக்ரைனும் ஒரே நாடு என்று சொல்லுமளவுக்கு ரஷ்ய அதிபர் புதின் சென்றதற்கு இதுவே பின்னணி.

As leaders across Asia and Europe scrambled to condemn the attack explosions were heard in Kyiv and other cities in Ukraine.

தளரும் பிடி!

உக்ரைன் அதிபராக விக்டர் யனுகோவிச் இருந்தவரை, ரஷ்யாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ரஷ்யாவுடனே இணக்கமாக இருந்தார். ஆனால், 2014இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளால் அவரது அரசு கவிழ்ந்து விளாடிமிர் ஜெலன்ஸ்கி உக்ரைன் அதிபர் ஆனார். இந்தக் காலகட்டத்தில்தான், உக்ரைன் வசமிருந்த கிரீமியாவை ரஷ்யா தன் வசம் கொண்டுவந்தது. அதேநேரத்தில், உக்ரைன் மக்கள் ஐரோப்பாவின் இதர நாடுகளைப் போன்ற வாழ்க்கை முறையை விரும்புகின்றனர் என்ற அடிப்படையில் ரஷ்யாவின் பிடியைத் தளர்த்த முயற்சித்தார் ஜெலன்ஸ்கி.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, விவசாயம் என்று போதிய தன்னிறைவுக்கான வளங்களைக் கொண்டுள்ள ரஷ்யா, அதே போன்றிருக்கும் உக்ரைன் தன் பிடியில் இருந்து விடுபடுவதை விரும்பவில்லை. மிக முக்கியமாக, இதன் மூலமாக அமெரிக்காவின் ஆதிக்கம் தனக்கு மிக அருகில் விரிவதை விரும்பவில்லை. கோவிட்-19 பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டோம் என்று உலகமே நம்பும் நிலையில் ரஷ்யா உக்ரைன் ஆக்கிரமிப்பில் இறங்கியிருப்பதையும், பெரிய நாடுகள் விதிக்கவிருக்கும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதையும் ஆராய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது போதாதென்று சீனாவும் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டுடன் உள்ளது.

அமெரிக்காவுடன் இணக்கமாக இருந்தாலும், இப்போதும் ரஷ்ய உறவைப் பழையபடியே பராமரித்துவரும் இந்தியாவும்கூட இவ்விஷயத்தில் எதிர் நிலைப்பாட்டை எடுக்கத் தயாராக இல்லை. இது எதிர்பார்த்ததுதான் என்பதுபோல அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தற்போது உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடக்கும் வாக்கெடுப்பைத் தவிர்க்கும் முடிவில் இந்தியாவும் சீனாவும் உறுதியாக இருக்கின்றன.

என்னவாகும் ரஷ்யா!?

ரஷ்யாவைச் சுற்றியிருக்கும் போலந்து, லாட்வியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளில் நேட்டோ படைகளும் போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் நேரிடையாகப் போரில் குதிக்காமல் ஆயுதங்களையும் மருந்துகளையும் போர் ஆலோசனைகளையும் மட்டுமே வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளது நேட்டோ. ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவுத் துறை அமைச்சர் லவரோவ் ஆகியோர் மீதான உலக நாடுகளின் நடவடிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறார் பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன்.

தற்போதைய சூழலில், ரஷ்யாவின் மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறைகளில் ரஷ்யாவின் முதலீடுகள் முடக்கப்படுமென்று தெரிகிறது. ஜெர்மனி நோக்கி ரஷ்யாவும் சில ஐரோப்பிய நிறுவனங்களும் இணைந்து மேற்க்கொண்டு வரும் நோர்டு ஸ்ட்ரீம்2 கேஸ் பைப்லைன் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலர், யூரோ பயன்பாட்டிலிருந்து ரஷ்யாவை விலக்கி வைப்பதன்மூலமாக, அதன் முதன்மையான 10 நிதி நிறுவனங்களின் வங்கிப் பரிமாற்றங்களுக்கு ‘செக்’ வைக்க முடிவு செய்துள்ளது அமெரிக்கா. ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோப்ளாட்டின் அனுமதியைத் தடை செய்ய முடிவு செய்திருக்கும் பிரிட்டன், ரஷ்யாவின் வங்கிகளையும் நிதி நிறுவனச் செயல்பாடுகளையும் ஸ்தம்பிக்க வைக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தவிர ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயையும் இயற்கை எரிவாயுவையும் பெற்றுக்கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் சில, அதிலிருந்து பின்வாங்குமென்று கூறப்படுகிறது. மொத்தத்தில், ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

உக்ரைனுடனும் ரஷ்யாவுடனும் பொருளாதாரப் பரிமாற்றங்களை மேற்கொண்டுவரும் இந்தியாவிலும் இப்போரினால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தவிர, தமிழ்நாடு உட்பட இந்தியாவிலுள்ள பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் கல்வி பயின்றுவருவதால் அவர்களது பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்து வரும் பொறுப்பை மாநில அரசு ஏற்குமென்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உலகின் பெரியண்ணன் யார் என்ற போட்டியை போர் அல்லாது பொருளாதாரம், பாதுகாப்பு சார்ந்த ஆதிக்க நடவடிக்கைகளே முடிவு செய்யும் சூழலில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. உக்ரைனை ரஷ்யா கைப்பற்றினாலும், பேச்சுவார்த்தை மூலமாக சுமுக நிலையை எட்டினாலும் இந்தப் போர் 21ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப் போகிறது. இனிவரும் நாட்களில் இதர நாடுகளின் நடவடிக்கைகள் மீண்டும் உலக நாடுகளை இரு வேறு அணிகளாகப் பிரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில்,
மூன்றாம் உலகப் போர்
என்ற ஒன்று ஏற்படாது என்பதே உலகிலுள்ள பெரும்பாலான மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையே இன்று நமது பலம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.